முத்தரப்பு டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 177 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயம் செய்தது

Header Banner

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 177 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயம் செய்தது

  Wed Mar 14, 2018 21:59        Tamil

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

 

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை 139 ரன்னுக்குள் சுருட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் பதம் பார்த்த இந்திய அணி, மறுபடியும் இலங்கையுடன் மோதிய போது அதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி இன்று தனது கடைசி லீக்கில் வங்காளதேசத்துடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் இந்தியா சிக்கலின்றி இறுதிப்போட்டியை எட்டிவிடலாம். 

 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி இந்திய அணியை முதலில் பந்து வீசுமாறு பணித்தது. இதன்படி இந்திய அனி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா 9.5 வது ஓவரில் 70 ரன்களுடன் விளையாடிய போது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 35 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இருவரும் சிறப்பான கூட்டணியை அமைத்து விளையாடினர். ரோகித் சர்மா நேர்த்தியான ஆட்டம் மூலம் இந்திய அணியின் ரன் கணக்கை முன்நோக்கி எடுத்துச் சென்றார். ரெய்னாவும் இந்த போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் கடைசி ஓவரின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து 47 ரன்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்தி களமிறங்கி ரோகித் சர்மாவுடன் விளையாடினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா ரன் அவுட் ஆனார். ரோகித் சர்மா 84 ரன்கள் எடுத்து இருந்தார். தினேஷ் கார்த்தி 2 ரன்களுடன் களத்தில் நின்றார். 

 

வங்காளதேச அணியில் ருபேல் ஹூசைன் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. வங்காளதேசத்திற்கு இந்தியா 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட்டை பறிகொடுத்த வங்காளதேசம் 12 ரன்களுடன் விளையாடி வருகிறது.

 


   முத்தரப்பு டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 177 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயம் செய்தது