திரிபுராவில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கட்சியின் 25 ஆண்டு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது

Header Banner

திரிபுராவில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கட்சியின் 25 ஆண்டு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது

  Sat Mar 03, 2018 22:28        India, Tamil

அகர்தலா, 

 

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதேபோல், கடந்த மாதம் 27-ம் தேதி நடந்த தேர்தலில் மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

 

இந்நிலையில்  3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.  திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்ற 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் சுய முன்னணியும் (ஐ.பி.எப்.டி.) 40–க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருந்தன. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 20–க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 

 

ஓட்டுகள் தொடர்ந்து எண்ணப்பட்டபோது, ஆட்சி அமைக்க 31 இடங்கள் போதும் என்ற நிலையில் பா.ஜனதா 35 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 16 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பா.ஜனதா இங்கு ஆட்சியை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.திரிபுரா மாநிலத்தில் 1993–ம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியே தொடர்ந்து வெற்றி கண்டு வந்தது. தற்போது அதன் ஆதிக்கத்துக்கு பா.ஜனதா முடிவு கட்டி உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் இந்த  வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 


   திரிபுராவில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கட்சியின் 25 ஆண்டு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது