பிஎன்பி மோசடி: நிரவ் மோடியின் மும்பை வீட்டில் சோதனை; ரூ. 5,716 கோடி மதிப்பில் பறிமுதல்

Header Banner

பிஎன்பி மோசடி: நிரவ் மோடியின் மும்பை வீட்டில் சோதனை; ரூ. 5,716 கோடி மதிப்பில் பறிமுதல்

  Mon Feb 19, 2018 22:38        Tamil

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோஷிக்கு சொந்தமான இடங்களில் சோதனை 5-வது நாளாக நடந்து வருகிறது. மும்பையில் சுமித்ரா மஹால் குடியிருப்பில் நிரவ் மோடியின் வீட்டில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று சோதனையிட்டனர். மும்பை, புனே, அவுரங்காபாத், தானே, கொல்கத்தா, டெல்லி, ஜம்மு, லக்னோ, பெங்களூரு, சூரத் உள்பட 38 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது மேலும் ரூ. 22 கோடி அளவிலான வைரங்கள், தங்கம், பணம் மற்றும் விலை மதிப்புமிக்க கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுவரையில் அமலாக்கப்பிரிவு சோதனையில் சிக்கிய பொருட்களின் மதிப்பு ரூ. 5,716 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

பிப்ரவரி 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நிரவ் மோடி மற்றும் மெகல் சோஷிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

 

 வங்கியில் எப்படி எல்ஒயூ வழங்கப்பட்டது பிற வங்கி நடவடிக்கைகள் எப்படி நடைபெற்றது என்பதை தெரிந்துக்கொள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த அதிகாரிகளையும் விசாரித்து உள்ளது என அமலாக்கப்பிரிவு தகவல்கள் தெரிவித்து உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு சோஷிக்கு வங்கி கடன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக கூறியவரும், இந்த விவகாரத்தை வெளிகொண்டு வந்தவரிடமும் தகவலை அமலாக்கப்பிரிவு பெற்று உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அமலாக்கப்பிரிவு மூத்த அதிகாரி பேசுகையில், “இந்த மோசடியில் குற்றவாளிகளால் எவ்வளவு சட்டவிரோத சொத்துக்கள் சேர்க்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெறும்,” என குறிப்பிட்டு உள்ளார். 2011-ம் ஆண்டில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து பைனான்ஸியல் ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவு எதிர்நோக்குகிறது. விசாரணையை முன்னெடுக்க நிரவ் மோடியின் தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள், சோஷி மற்றும் அவர்களுடைய நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை அமலாக்கப்பிரிவு ஆய்வு செய்து வருகிறது. 

 

சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள், தகவல்தரவு உபகரணங்கள் மற்றும் பிற ஆவணங்கள் ஆராயப்பட்டு வருகிறது என மற்றொரு அதிகாரி கூறிஉள்ளார். அனைத்து விசாரணை முகமையும் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

 


   பிஎன்பி மோசடி: நிரவ் மோடியின் மும்பை வீட்டில் சோதனை; ரூ. 5,716 கோடி மதிப்பில் பறிமுதல்