பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி மும்பை வைர வியாபாரிக்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு

Header Banner

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி மும்பை வைர வியாபாரிக்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு

  Wed Feb 14, 2018 22:06        Tamil

பொதுத்துறை வங்கியாக திகழும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (சுமார் ரூ.11,700 கோடி) பண மோசடி நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த அந்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீசுவரருமான நிரவ் மோடி மற்றும் ஒரு ஆபரண நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. வங்கியிடம் இருந்து புகார் வந்து உள்ளது என்பதை உறுதி செய்து உள்ள சிபிஐ தரப்பு தகவல்கள், இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்களை உடனடியாக வெளியிட இயலாது. அது விசாரணையை பாதிப்பதாக அமையும் என்று தெரிவித்துவிட்டன.

 

 ரூ.280 கோடி மோசடி 

  

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏற்கனவே நிரவ் மோடியும் அவருடைய பங்குதாரர்களும் ரூ.280 கோடி மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில்  சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வைர வியாபாரியும், கோடீசுவரருமான நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வங்கியின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ளது. இப்போது ரூ. 280 கோடி மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து உள்ளது.

 

பஞ்சாப் நேஷனல் வங்கியால் புகார் தெரிவிக்கப்பட்ட நிரவ் மோடி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு பணமோசடி வழக்கை பதிவு செய்து உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 


   பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி மும்பை வைர வியாபாரிக்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு