ஓ.பி.எஸ். அணிக்கு திரண்ட கூட்டத்தால் சசிகலா ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி

Header Banner

ஓ.பி.எஸ். அணிக்கு திரண்ட கூட்டத்தால் சசிகலா ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி

  Thu Mar 09, 2017 15:48        Tamil

ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பது அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் என்னதான் நடந்தது என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளே தவித்த படி உள்ளனர்.

சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்தே ஓ.பி.எஸ். அணியினர் முதலில் அரசியல் செய்தனர். சசிகலா ஜெயிலுக்கு சென்று விட்ட பிறகு ஜெயலலிதா மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களும், மர்மங்களும் விசுவரூபம் எடுத்துள்ளதால் ஓ.பி.எஸ். அணியினர் தற்போது அதை கையில் எடுத்துள்ளனர்.

இதன் காரணமாக ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவு அதிகரித்தப்படி உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஓ.பி.எஸ். அணியினர் நடத்திய உண்ணாவிரதத்துக்கு கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் கூடியது.

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருந்தார். இதில் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் 36 இடங்களில் ஓ.பி.எஸ். அணியினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. அ.தி.மு.க.வினர் அணி அணியாகவும், அலை அலையாகவும் திரண்டு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு நடந்த உண்ணாவிரத போராட்டம் என்பதால், அ.தி.மு.க.வினர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பெண்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் ஓ.பி.எஸ். நடத்திய இந்த உண்ணாவிரத போராட்டம் பல இடங்களில் உணர்ச்சி மயமாகவே காணப்பட்டது.

சென்னை மட்டுமின்றி அனைத்து இடங்களிலுமே ஓ.பி.எஸ். அணியினரே எதிர்பாராத வகையில் அ.தி.மு.க.வினர் அதிக அளவில் திரண்டு விட்டனர்.

உண்ணாவிரதம் நடந்த இடங்களுக்கு காலையிலேயே வந்து விட்ட அவர்கள், மாலையில் முடியும் வரையிலும் கலையாமலேயே அமர்ந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

இப்படி கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் கூடியதால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில், ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு கூடிய கூட்டத்தை பார்த்து சசிகலா ஆதரவாளர்கள் வாயடைத்து போய் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஓ.பி.எஸ். அணிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவது சசிகலா ஆதரவாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. இதனால் அடுத்த கட் மாக என்ன செய்வதென்று அவர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அணி மாறுவதை தடுக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் அதிரடி வியூகம் வகுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான சுற்றுப் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அது நிறைவடைந்தவுடன் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

‘‘தொண்டர்கள் தரிசனம்’’ என டி.டி.வி.தினகரனின் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வினர் அணி மாறுவதை தடுக்க டி.டி.வி.தினகரனின் இந்த சுற்றுப் பயணம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.

maalaimalar


   Opies, Supporters,severe shock,crowd that turned,team Shashikala