செம்மரம் கடத்தியதாக தமிழக தொழிலாளர்கள் மீது நடவடிக்கை: கைது எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு

Header Banner

செம்மரம் கடத்தியதாக தமிழக தொழிலாளர்கள் மீது நடவடிக்கை: கைது எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு

  Thu Mar 09, 2017 15:45        Tamil

ஆந்திர வனப்பகுதிகளில் செம்மரக் கடத்தலை தடுக்க அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, இச்சம்பவத்தின் பின்னணியில் ‘சதி’ நடந்து இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் கூறின. கூலி வேலைக்கு சென்ற தமிழக தொழிலாளர்களை பிடித்துச் சென்று ‘சித்ரவதை’ செய்து சுட்டுக் கொன்றதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, ஆந்திர மாநில வனத்துறை சட்டத்திலும் அரசு மாற்றம் கொண்டு வந்தது. செம்மர வழக்கில் பிடிபடுவோர் எளிதில் ஜாமீனில் வெளி வரமுடியாத படியும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.

இதற்கிடையே, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு (டாஸ்க் போர்ஸ்) என்று சிறப்பு போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அதன் பிறகும், செம்மரக் கடத்தலை தடுக்க முடியாமல் ஆந்திர காவல்துறையும் வனத்துறையும் திணறி வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர வனப்பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலைக்குள் செம்மரம் கடத்தியதாக ஒரே நேரத்தில் 174 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடப்பா மாவட்டம் பொதட்டூர், காஜீவ்பேட்டை சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செம்மரக் கடத்தல்காரர்கள் நடமாட்டம் தென்பட்டது.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். கடத்தல் கும்பலின் எண்ணிக்கையை காட்டிலும் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அனைவரையும் பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. கடத்தல் கும்பல் நாலாபுறமும் தப்பி ஓடினர்.

முதற்கட்டமாக சுமார் 16 பேரை மட்டுமே போலீசாரால் பிடிக்க முடிந்தது. ஏராளமானோர் தப்பி ஓடிவிட்டனர். சிக்கியவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 7 டன் செம்மரக் கட்டைகள், 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடிய கும்பலை பிடிக்க வனப்பகுதியில் களமிறங்கிய போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

கடப்பாவை சுற்றியுள்ள குக்கல் தொட்டி, ரெயில்வே கோடூர், காஜூவ்பேட்டை, பொதட்டூர், லங்கமல்லா ஆகிய வனப்பகுதியில் விடிய, விடிய நடத்திய ‘கோம்பிங் ஆபரேசன்’ எனும் தேடும் பணியில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு முதல் இன்று காலை வரை, சுமார் 174 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

அவர்கள் குறித்த விவரங்களை தனித்தனியே சேகரித்து வருகின்றனர்.அவர்களை வனப்பகுதியில் இருந்து வெளியே அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 174 பேர் சிக்கிய நிலையில், மேலும் பலர் வனப்பகுதியிலேயே பதுங்கி இருப்பதாக தெரிகிறது.

அவர்களை பிடிக்கவும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக ஆந்திர அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

maalaimalar   State workers,cemmaram smuggling,operation,increase to 174 the number ,arrested