ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்குமா?: சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு

Header Banner

ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்குமா?: சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு

  Wed Jan 11, 2017 14:41        Tamil

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை பிடிப்பது என்பது உலகப் புகழ் பெற்றது.

கடந்த 2011-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையை மத்திய அரசு சேர்த்தது.

இதையடுத்து தமிழ்நாட்டில் தைப்பொங்கல் திருநாள் சமயத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான உரிய அனுமதி இன்னும் வெளிவரவில்லை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தமிழ் ஆர்வலர்களும், கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவோம் என்றும் பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன.

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடை நீடிப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய-மாநில அரசுகள் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வலுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை இணை மந்திரி அனில் மாதவ் தாவே நேற்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய போது, “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்” என்றார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் கடந்த ஆண்டில் இருந்தே நிலுவையில் உள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டது.

காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து காளையை விலக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான நிலையில் மத்திய அரசு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இதில் எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்துள்ளதால் சுப்ரீம் கோர்ட்டு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பை வெளியிட முடிவு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்குமா? என்பதில் தொடர்ந்து கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசின் வாதங்களை சுப்ரீம் கோர்ட்டு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனுமதி கொடுப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிபதிகள் இதுவரை தெரிவித்துள்ள கருத்துக்கள் எதிர்மறையாக உள்ளன. எனவே ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்குவதற்கு வாய்ப்புகள் மிக, மிக குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே மத்திய அரசு தனது விலங்குகள் தடை சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.   Supreme Court, judgment ,lifted the ban Jallikattu