தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் தீபா பற்றி விசாரித்த அமித்ஷா

Header Banner

தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் தீபா பற்றி விசாரித்த அமித்ஷா

  Wed Jan 11, 2017 14:31        Tamil

முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி காலமானார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராகவும், சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். சசிகலா விரைவில் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சசிகலா தலைமைக்கு அ.தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தியாகராய நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு தினமும் சென்று அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

அவர்களிடம் அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக தீபா தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் தீபா பற்றி அகில இந்திய பா.ஜனதா தலைவர் அமித்ஷா விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடந்தது. இதில் தமிழகத்தின் சார்பில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து தமிழக நிர்வாகிகளுடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷா அப்போது தனியாக ஆலோசனை நடத்தினார்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அமித்ஷா அவர்களிடம் கேட்டு அறிந்தார். அதோடு தீபா பற்றியும், அவரது வீட்டு முன்பு திரண்டு வரும் தொண்டர்கள் கூட்டம் பற்றியும் தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் அவர் கேட்டு அறிந்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பா.ஜனதா தலைவர் ஒருவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தீபா ஆகியோர் குறித்தும், தி.மு.க. செயல் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்தும் தேசிய செயற்குழுவின் போது அமித்ஷா விரிவாக கேட்டு அறிந்தார்.

தீபாவின் வீட்டு முன்பு தொண்டர்கள் குவிந்து வருவது குறித்தும், அவருக்கு உதவி செய்பவர்கள், தொண்டர்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்தும் கேட்டார். அதோடு தீபாவின் பின்னணி, கடந்த கால செயல்பாடு குறித்தும் அமித்ஷா விசாரித்தார்.   Tamil Nadu ,BJP leaders,inquired about Deepa Shah